English   සිංහල   தமிழ்

பெரெண்டினா பற்றி


வறுமையொழிப்பை நோக்காகக்கொண்டு இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றாக பெரெண்டினா குழு முன்னின்று செயற்படுகின்றது. இது பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் (GTE) Ltd (BDS), பெரெண்டினா நுண்நிதி நிறுவனம் (GTE) Ltd (BMI) மற்றும் பெரெண்டினா தொழில்வள நிறுவனம் (BEC) என்று மூன்று நிறுவனங்களை தன்னகம் கொண்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் இலாபமீட்டலை நோக்காக கொண்டிராமல், சேவை நோக்கிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களாக இயங்குகின்றன. இரண்டு பில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்ட வருடாந்த வரவு செலவு திட்டத்துடன் தன் பணியை பெரெண்டினா செப்பனே செய்துகொண்டிருக்கின்றது. பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனமானது வாழ்வாதார உதவிகள், உட்கட்டமைகப்பு வசதிகளும் முன்னேற்றமும், சமூக சுகாதார நிகழ்ச்சிகள், முதியோர்களுக்கான விசேட திட்டங்கள், திறமையான மாணவர்களுக்கான புலமைபரிசில்கள் மற்றும் சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் வழங்குதல் போன்ற சமூகநல சேவைகளை செயற்படுத்துகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் பின்தங்கிய கிராமங்களிலும் பெருந்தோட்டங்களிலும் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்த 40,000 மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர். வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இலங்கையில் தொழிற்படும் சிறந்தவொரு நுண்நிதி நிறுவனமாக பெரெண்டினா நுண்நிதி நிறுவனம் (BMI) சிறு கடன்களை வழங்கி வருகின்றது. 18 கிளைகளை தன்னகம் கொண்டுள்ள BMI நிறுவனமானது, தற்போது 62, 000 க்கும் மேற்பட்ட சேவை பெறுனர்களை தன்னகம் கொண்டுள்ளதோடு வருடாந்தம் 1.3 பில்லியன் ரூபாயை சிறு கடன்களாக வழங்கியுள்ளதுடன், சேவை பெறுனர்களின் மீள்செலுத்தும் வீதத்தினை 99% ஆக தக்கவைத்து சிறப்பாக செயற்படுகின்றது. இலங்கையில் வேறு எந்த தனியார் நிறுவனங்களாலும் ஒப்பிட முடியாத மிகக்குறைந்த வட்டி வீதத்துக்கு கடன் வழங்குவது BMI நிறுவனத்தின் விஷேட சிறப்பம்சமாகும்.


பெரெண்டினா நிறுவனம் பற்றி மேலும் விபரங்கள் அறிய www.berendina.org எனும் வலைத்தளத்துக்குள் பிரவேசியுங்கள்.

பெரெண்டினா தொழில்வள நிலையம்


பெரெண்டினா தொழில்வள நிலையமானது (BEC) கிராமிய மற்றும் பெருந்தோட்டப் புறங்களில் வாழும் வறிய இளைஞர் யுவதிகளுக்கு மிகப்பொருத்தமானதும் விளைத்திறனானதுமான தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தர வழி வகைகளை செய்வதோடு நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் செயற்திறன் மிக்க ஊழியர் படையையும் பெற்றுத்தருவதை நோக்காகக் கொண்டு 2000 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றது.

2000 ஆம் ஆண்டு தனது பணியை தொடங்கிய பெரெண்டினா தொழில்வள நிலையமானது (BEC), இதுவரையில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு திறன் பெற்ற மற்றும் பகுதியளவில் திறன்பெற்ற இளைஞர் படையொன்றை வழங்கி அந்த நிறுவனங்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது. இளைஞர்கள் கொண்டுள்ள தொழில் அனுபவம் மற்றும் கல்வித் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு, சிறந்த ஆய்வுக்கு பின்னர் அவர்களை விளைத்திறனானதும் இலாபகரமானதுமான தொழில்களுக்கு BEC நிறுவனம் இணைத்து வருகின்றது. தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவ்விளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல்களையும் அறிவூட்டல்களை மட்டுமின்றி தொழில் பயிற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பயிற்சிகளையும் BEC வழங்கி வருகின்றது. தகுதியான இளைஞர் யுவதிகள் தொழில் ரீதியான முன்னேற்றத்தை காண்பதற்காக தொழிற்பயிற்சி புலமைபரிசில்களையும் BEC வழங்குகின்றது. BEC நிறுவனத்தில் பதிவான இளைஞர்களின் சுயவிபரக்கோவைகள் சிறந்த முறையில் பாதுகாப்பாக பேணப்படுவதுடன், பதிவான தொழில் வழங்கும் நிறுவனங்களின் தேவைப்பாடுடன் மிகப்பொருத்தமானதா என்பது நன்கு ஆராயப்பட்டு பின்னர் அந்நிறுவனங்களில் தொழில் வெற்றிடங்களுக்காக அவ்விளைஞர்கள் இணைத்து கொள்ளப்படுகின்றனர். BEC நிறுவனத்திடமிருந்து இதுவரை 13,000 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பை ஈட்டிக்கொண்டுள்ளதுடன், 2013 மட்டும் 1467 பேர் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

பெரெண்டினா தொழில்வள நிலையத்தின் தலைமையகம் நாவலையில் அமைந்துள்ளதுடன், இலங்கை முழுதும் முறையே யட்டியன்தோட்டை, கினிகத்தேனை, கேகாலை, திருகோணமலை, அநுராதபுரம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி மாத்தறை, மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் 10 மொத்தம் கிளைகளைக் கொண்டு வியாபித்துள்ளது.


நோக்கு

வறுமை நிலையற்ற, சமத்துவமானதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தைப் பெற்றதுமான நிலையான சமூகத்தை கட்டியெழுப்புதல்.

பணிக்கூற்று

தொழிலற்ற இளைஞர் யுவதிகள் மற்றும் குறைந்த தகுதியில் தொழிலில் ஈடுபடுவோரையும் சமூகத்தில் பயனுள்ள பிரஜைகளாக மாற்றும் நோக்குடன், சிறந்த தொழில் வாய்ப்புகளை ஈட்டிக்கொள்ளவும் அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளவும் தொழிற்பயிற்சிகள், தொழில் வழிகாட்டல்கள், தொழில் வாய்ப்புகளுக்கான தொடர்புகளை பெற்றுத்தருதலும் மற்றும் சமூகநல வணிகத்தை விஸ்தரித்தலுமே எமது பணிக்கூற்றாகும்.


 

முக்கிய செயற்பாடுகள்


தொழில் வழங்கல்

  • தொழிற்சந்தைகள்

  • தொழில் தேடுவோர்கள் மற்றும் தொழில் வழங்குனர்கள் என்போருக்கிடையில் துரித தொடர்பை ஏற்படுத்த தொழிற்சந்தைகளை தனது முக்கிய மூலோபாயமாக கொண்டு BEC நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. பிரதேச ரீதியில் மற்றும் மாவட்ட ரீதியில் ஒரு நாள் நிகழ்வாக வருடந்தோறும் பலமுறை தொழிற்சந்தைகளை ஒழுங்குச்செய்து வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் பங்குக்கொள்ளும் இத்தகைய தொழிற்சந்தைகளில் பல்வேறுபட்ட விதங்களிலான தொழில் வாய்ப்புக்கள் இளைஞர் யுவதிகளுக்கு திறந்து விடப்படுகின்றன.

  • சிறிய மட்டதொழிற்சந்தைகள்

  • ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் பங்குபெறும் சிறு தொழிற்சந்தையானது பின்தங்கிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு சில வகையான தொழில் வெற்றிடங்களை நிரப்ப நடாத்தப்படும்.


தொழில் பயிற்சிகளுக்கான புலமைப்பரிசில்கள்

இதுவரை பெரெண்டினா நிறுவனமானது, 6,000க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளதுடன், அவற்றில் 65% மேற்பட்டோர் விளைத்திறனான தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். தொழில் பயிற்சி அதிகார சபை (VTA), தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயற்சி அதிகார சபை (NAITA), தேசிய இளைஞர் சேவைகள் அதிகார சபை (NYSC) போன்ற முக்கிய நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் தொழிற்பயிற்சிக்காக இளைஞர் யுவதிகளை BEC நிறுவனம் இணைத்து வருகின்றது. அரச நிறுவனங்களில் பயிற்சிப்பெறும் இளைஞர் யுவதிகளுக்கு BEC நிறுவனத்தின் மூலம் பயணச் செலவுகள் வழங்கப்படுவதுடன், தனியார் நிறுவனங்களில் தொழிற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு பகுதியளவில் அல்லது முழுமையாக, அவர்களின் பொருளாதார மட்டங்களை கருத்திற்கொண்டு நிதியுதவியும் வழங்கப்படுகின்றது.


தொழில் வழிகாட்டல்கள் மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சிகள்

BEC வழங்கும் முக்கிய சேவைகளில், தொழில்சார் வழிகாட்டல்கள் மற்றும் அறிவூட்டல்கள் என்பன முக்கியமானவையாகும்.. பாடசாலை கல்வியை முடித்து வெளிவரும் மாணவர்கள் மட்டுமின்றி ஏனைய இளைஞர் யுவதிகளுக்கு, அவர்களின் திறமைகள் மற்றும் ஈடுபாடு போன்றவற்றை கருத்திற்கொண்டு அவர்களுக்கு சரியான தொழில் வழிகாட்டலை வழங்குவதே இந்தச் சேவையின் கருப்பொருளாகும். இந்த சேவை மூலம், இளைஞர் யுவதிகள் தமது தொழில் காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை முகம் கொடுத்து நிவர்த்திச் செய்துக்கொள்ளவும், தமது தொழில்களில் நிலைத்து நிற்கவும் நம்பிக்கை பெறுகின்றனர். சக ஊழியர்களுடன் சிறந்த அன்னியோனியத்தை பேண முடியாமை, புதிய பதவிக்கு ஏற்ற வகையில் தம்மை தயார்செய்ய சிரமப்படுதல் போன்றன தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் மிக முக்கிய சிக்கல்களாக BEC கருதுகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் தனிநபர் தொழில் திட்டமிடல் மற்றும் பயிற்சிகள் சிறந்த முறையில் உறுதுணையாகும். ஆகவே, BEC நிறுவனமானது தனிப்பட்ட மற்றும் குழு ரீதியான வழிகாட்டல் மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சிகளை மட்டுமின்றி, இளைஞர்கள் தமது இலக்குகள், திறமைகள் மற்றும் தமது முக்கியத்துவங்களை கண்டறியும் வகையில் மனோதத்துவ ரீதியான பயிற்சிகளையும் வழங்குகின்றது. இது தவிர, அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய அளவிலான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய, BEC தனது பங்களிப்பையும் வழங்கி வருகின்றது.

சமூகம் சார் வணிகம்

சமூகம் சார் வணிகம் என்பது சமூகமய நோக்கங்களை (வறுமையொழிப்பு போன்ற) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற வணிகமாவதுடன், வணிக ரீதியாக இலபகரமானதும், பொருத்தமானதும் நிலைத்து நீடிக்கக் கூடியதாயும் அமையும். இந்த நோக்கில், பல்வேறுபட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பின்தங்கிய பிரதேசங்களில் உற்பத்தி நிலையங்களை நிறுவி செயற்படுவதுடன், அதேசமயம் அந்நிறுவனங்களுக்கு வட்டியற்ற கடன்கள், முகாமைத்துவ உதவிகள், பயிற்சிபெற்ற ஊழியர் படை மற்றும் இட வசதிகளையும் BEC பெற்றுத்தருகின்றது. தற்போது, கேகாலையில் மட்டும் 21 உற்பத்தி நிலையங்கள் வெவ்வேறு இடங்களில் செயற்படுவதுடன், அதிலே 260 இளைஞர்கள் மற்றும் பெண்மணிகள் முழுநேர அல்லது பகுதிநேர தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.